Wednesday 23 August 2017

பக்கரை விசித்ரமணி

அருணகிரிநாதர் முருகன் மீது பாடியுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. வினாயகர் மீதும் பாடியுள்ளார் என்பதும் பலர் அறிந்தது. கைத்தல நிறைகனி என்னும் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.

இப்பாட்டைத் தவிர உம்பர்தரு தேனு மணி கசிவாகி, நினது திருவடி சக்தி மயில் கொடி, பக்கரை விசித்திர மணி என்னும் பல பாடல்களும் உள்ளன.

சிவபெருமான் பற்றியும், பார்வதி பற்றியும், விஷ்ணு பற்றியும் எண்ணற்ற குறிப்புகள் திருப்புகழில் வருகிறது.

இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஒரு பாடலைப் பார்ப்போம்.

அருணகிரிநாதருக்கு, முருகன், திருவண்ணாமலையில் அருள் புரிந்து, முத்தைத்தரு என்னும் பாடலை, அவரைப் பாடவைத்தார் என்பது நாம் அறிந்த ஒன்று.

அதற்குப் பிறகு, திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் என்னும் தலத்திற்குச் சென்று தனது வேல், மயில், சேவல், கடப்ப மாலை, திருவடி, தோள்கள் ஆகியவற்றைப் பற்றி பாடுமாறு கூறி மறைந்தார்.

அருணகிரியாரும் வயலூருக்குச் சென்றார். அங்கே உள்ள விநாயகப் பெருமான் முன் நின்று, பாடல்கள்  பாட அருள வேண்டும் என்று வேண்ட, விநாயகரும்  அருளினார். அடுத்த நொடி, அழகிய பாடல்கள் வரலாயிற்று.

அந்த விநாயகரின் முன்னின்று பாடிய பாடல் இது.

இந்தப் பாடலில், விநாயகப் பெருமான் ஏற்கும் உணவுப் பண்டங்களைப் பற்றி பாடுகிறார். நம்மால் நிவேதனமாகப் படைக்க முடியுமோ முடியாதோ, இப்பாடலைப் படித்தாலே, நிவேதனங்களைப் படைத்த பலன் கிடைக்கும். விநாயகப் பெருமான் நமக்கு அருளுவார். அவர் அருளால், அவரையும், அவர் இளவல் முருகனையும் நன்கு பாடிப் பணிய முடியும்.

ஆடும் பரிவேல் அணிசெ வலெனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே


http://www.kaumaram.com இந்த வலைதளத்தில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், அநுபூதி, அந்தாதி என்று பல பாடல்கள், இசையோடு, பொருளுரையும் இருக்கிறது.

இருந்தாலும் இன்னொரு பதிவு இங்கே இடுவதால் குறைவு ஒன்றும் இல்லை. மேலும் பரவ எளிதாய் இருக்கும்.

ராகம் - மோகனம்
தாளம் - ஆதி

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
..பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

.பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
...பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
..சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

.செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
...செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
..எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

.டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
...ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
..விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

.வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
...வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

சற்று குழப்பமாக இருக்கிறதா? பதம் பிரித்தால் எளிதாகி விடும்.

பக்கரை விசித்ரமணி பொற்கல் அணை இட்டநடை
..பட்சி எனும் உக்ர துரகமும், நீபப்

.பக்குவ மலர்த்தொடையும், அக் குவடு பட்டு ஒழிய
...பட்டு உருவ விட்ட அருள் கை வடிவேலும்,

திக்கதும் மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
..சிற்றடியும், உற்றிய ப(ன்)னிருதோளும்,

.செய்ப்பதியும், வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
...செப்பு என எனக்கு அருள் கை மறவேனே

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு உடன் நெய்,
..எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்(டு)

.எச்சில், பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள
...ரிப்பழம் இடிப்பல்வகை, தனிமூலம்

மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு
..விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி

.வெற்ப, குடிலச்சடில, வில் பரமர் அப்பர் அருள்
...வித்தக, மருப்பு உடைய பெருமாளே.

பொருள்:

1. பக்கரை விசித்ரமணி பொற்கல் அணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும்-

முதலில் மயில் பற்றி பாடுகிறார்.

பக்கரை = காலூன்றும் படி (குதிரை மேல் ஏறுவதற்கு இருக்கும் படி)
விசித்ரமணி = அழகிய மணி
பொற்கல் = பொன்னிறமான மெத்தைப் போன்ற மேனி

இவற்றைப் பூண்டு கம்பீர நடைபயிலும் பறவை - மயில்.

மயில் மீது ஏறுவதற்கு எதற்காக படி வேண்டும்? முருகனுக்கு மயில் வாஹனம். குதிரையைப் போன்றது. அதனால்.

துரகம் = குதிரை.

2. நீபப் பக்குவ மலர்த்தொடையும்

அடுத்து, கடப்ப மாலையைப் பற்றி பாடுகிறார்.
நீபம் = கடப்பம்.
தொடை = மாலை.

3. அக்குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்ட அருள் கை வடிவேலும்

அடுத்து, வேலாயுதத்தைப் பற்றி வருகிறது. அக்குவடு = அக் + குவடு = அந்தக் குவடு. குவடு என்றால் மலை. கிரௌஞ்ச மலை மீது வேலை எய்தினார் முருகன். அந்த

வேலானது, அந்த மலையினை ஊடுருவிப் பிளந்தது. மலைமீது பாய்ந்து, மலையை அழித்த வேல் என்கிறார்.

4.திக்கதும் மதிக்க வரு குக்குடமும், - குக்குடம் = சேவல். எத்திசையாரும் வணங்கும் சேவல் கொடியும்

5. ரட்சைதரு சிற்றடியும், - பாதுகாக்கும் சிறிய பாதமும். முருகன் குமரன் அல்லவா. அதனால் அவனது அடி, சிறிய அடி.

6. உற்றிய ப(ன்)னிருதோளும், - திரண்ட பன்னிரு தோள்களும்

7. செய்ப்பதியும் - வயலூரும்

வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே

செய் = வயல் (நன்செய், புன்செய் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா)
பதி = ஊர்
செய்ப்பதி = வயலூர்.

இவ்வாறு இந்த ஏழு பொருட்களை (மயில், கடப்ப மாலை, வேல், சேவற்கொடி, திருவடி, தோள்கள், வயலூர் ஆகியவற்றை) வைத்து உயர்ந்த திருப்புகழை விரும்பி சொல்லுக என்று அருளிய கரங்களை நான் மறக்க மாட்டேன் என்கிறார்.

அடுத்து, விநாயகப் பெருமான் விரும்பி உண்ணும் பொருட்களைப் பட்டியல் இடுகிறார்.

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு உடன் நெய்,
..எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்(டு)

.எச்சில், பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள
...ரிப்பழம் இடிப்பல்வகை, தனிமூலம்

மிக்க அடிசில், கடலை,

1. இக்கு - கரும்பு
2. அவரை
3. நற்கனிகள்
4. சர்க்கரை
5. பருப்பு
6. நெய்
7. எள்
8. பொரி
9. அவல்
10. துவரை
11. இளநீர்
12. வண்(டு) எச்சில் - தேன்
13. பயறு
14. அப்பவகை
15. பச்சரிசி பிட்டு
16. வெளரிப்பழம்
17. இடிப்பல்வகை - பலவிதமான மாவு வகைகள்
18 தனிமூலம் மிக்க அடிசில் - தனித்துவம் வாய்ந்த கிழங்கு வகைகள். பூமிக்கு அடியில் விளைவதால் அடிசில்.
19. கடலை

பட்சணம் எனக்கொள் ஒரு - மேலே கூறியவற்றை உணவாகக் கொள்ளும், ஒப்பற்றவர்.

விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி - வினைகளைத் தீர்க்கும் வல்லவன், அருட்கடல். ஆழி = கடல்.

வெற்ப - கருணை மலை

இவை விநாயகப் பெருமான் பற்றிய வர்ணனை.

இனி சிவபெருமானைப் பற்றி பாடுகிறார்.

குடிலச்சடில - வளைந்த சடைமுடி உடையவர்
வில் பரமர் - பினாகம் என்னும் வில்லை ஏந்துபவர்
அப்பர் - யாவர்க்கும் தந்தை

அருள் வித்தக - இப்படிப்பட்ட சிவபெருமான் அருளிய வித்தகனே

மருப்பு உடைய பெருமாளே - தந்தம் உடைய பெருமாளே. மருப்பு = தந்தம், கொம்பு.

நெடிய பதிவுதான். எனினும், முடிந்தபோது படித்து அர்த்தத்தை நன்கு மனதிற்கொள்ளவும். திருப்புகழை விருப்பமொடு படிப்போம், பாடுவோம்.

விநாயகப் பெருமானே சரணம்.
முருகா சரணம்.
அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்.