Monday 18 September 2017

உம்பர்தருத் தேனுமணி

ராகம் - ஹம்ஸத்வனி
தாளம் - அங்க தாளம் (5 5 6) [2 தடவை கண்டசாபு தாளம், 1 தடவை ரூபக தாளம்]

தகதகிட தகதகிட தகதகதிமி

தந்ததனத் தானதனத் தனதான

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
..ஒண்கடலிற் றேனமுதத்  துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
..என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
..தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
..ஐந்துகரத் தானைமுகப் பெருமானே

பதம் பிரித்து:

உம்பர்தருத் தேனு மணிக் கசிவாகி
..ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
..என்றன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத்து அணைவோனே
..தந்தை வலத்தால் அருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
..ஐந்து கரத்து ஆனை முகப் பெருமானே

உம்பர்தரு - தேவலோக மரம் - கற்பக வ்ருக்ஷம்
தேனு - தேவலோகப் பசு - காமதேனு
மணி - உயர்ந்த சிந்தாமணி

இவை மூன்றுமே நாம் என்ன கேட்கிறோமோ அவற்றை நமக்குத் தந்துவிடும்.

கற்பக வ்ருக்ஷம் அதன் இடத்திலேயேதான் இருக்கும். நாம் தான் அதனிடம் சென்று கேட்கவேண்டும்.

காமதேனுவை, நமக்கு உயர்ந்த வரம் இருந்தால், எங்கு வேண்டுமானாலும்  அதனை அழைத்துச் செல்லலாம். நம்மிடத்திலே வந்து, நமக்கு வேண்டுவனவற்றைக் கொடுக்கும்.

சிந்தாமணி என்பது, உயர்ந்த மணி. நாம் அதனிடம் கேட்க, மணி அவ்விடத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிந்தாமணியை மனதளவில் நினைத்துக்கொண்டு கேட்டாலோ அல்லது நினைத்தால் மட்டுமோ போதும். உடனே தந்துவிடும்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், அம்பாள், உயர்ந்த சிந்தாமணிகள் நிறைந்த க்ருஹத்தில் அமர்ந்திருக்கிறாள் (சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா) என்று போற்றுகிறது.

சௌந்தர்ய லஹரியில், ஸ்ரீ ஆதி சங்கரர், அம்பாளை "சிந்தாமணி குணநிகா" என்று பாடுகிறார். சிந்தாமணிக் குவியல் என்று பாடுகிறார்.

ஒரே ஒரு சிந்தாமணி கல்லே, கேட்பதைத் தந்துவிடும் என்றால், பல கற்கள் நிறைந்த குவியல் அம்பாள் என்றால், எவ்வளவு நமக்குத் தருவாள்?

அம்பாளைக் கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி என்றெல்லாம் பெரியோர்கள் போற்றி மகிழ்கின்றனர்.

நவராத்திரி தொடங்க இருக்கும் இத்தருவாயில், அம்பாளை வேண்டி அதிக வரம் பெற்று, உலகம் உய்ய ப்ரார்த்திப்போம்.

அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் நாம் பெறலாம் என்று பாடினார் மஹாகவி பாரதியார்.

அம்பிகையின் புதல்வனான ஆனைமுகனை, அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்.

1. கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி இவற்றைப் போன்ற கருணை, நம் உள்ளத்தில் தோன்ற வேண்டும்.

2. ஒளி வீசும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போல், இனிமை நம் உள்ளத்தில் நிறைய வேண்டும்.

3. உள்ளத்தில் தோன்றிய அந்த இனிமையை, நாம் பல காலமும்  பருக வேண்டும்.

4. இவ்வாறெல்லாம் நடக்க, நம் மேல் ஆதரவு காட்டி அருளவேண்டும் விநாயகப் பெருமானே

5. தம்பி (முருகன்) அவன், வள்ளியை மணம் செய்துகொள்ள, அந்த திணை வனத்தில் யானையாக வந்து உதவியவனே

6. தந்தையான சிவபெருமானை வலம் வந்து, மாங்கனியைப் பெற்றவனே, அந்தக் கனியைக் கையில் வைத்துள்ளவனே.

7. வணங்கும் அடியார்களுக்கான முக்திப் பொருளே

8. ஐந்து கரங்கள் கொண்ட யானை முகப் பெருமானே

இந்தப் பாடலில் விநாயகப் பெருமானின் இரண்டு லீலைகள் பாடப்பட்டுள்ளது.


Monday 11 September 2017

முத்தைத்தரு

ராகம் - ஷண்முகப்ரியா
தாளம் - மிஸ்ரசாபு (தகிட தக திமி)

தத்தத்தன தத்தத் தனதன
.தத்தத்தன தத்தத் தனதன
..தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
.அத்திக்கிறை சத்திச் சரவண
..முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

.முக்கட்பர மற்குச் சுருதியின்
..முற்பட்டது கற்பித் திருவரும்
...முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
.ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
..பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

.பத்தற்கிர தத்தைக் கடவிய
..பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
...பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
.நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
..திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

.திக்குப்பரி அட்டப் பயிரவர்
..தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
...சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
.குக்குக்குகு குக்குக் குகுகுகு
..குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

.கொட்புற்றெழ நட்பற் றவுணரை
..வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
...குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

பதம் பிரித்து:

Prose order:

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை,
சத்திச் சரவண,
முத்திக்கு ஒரு வித்துக் குருபர

எனவோதும் முக்கண் பரமற்குச், சுருதியின் முற்பட்டது கற்பித்து, இருவரும், முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேணப்.

பத்துத்தலை தத்தக் கணைதொடு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது,
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்,
பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒருநாளே?

"தித்தித்தெய" ஒத்தப், பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப், பயிரவி திக்கொட்க, நடிக்கக், 
கழுகொடு கழுதாடத், 
திக்குப்பரி அட்டப் பயிரவர் "தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு" சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக், களமிசை "குக்குக்குகு குக்குக் குகுகுகு" குத்திப், புதை, புக்குப், பிடி என முதுகூகை கொட்புற்று எழ 

நட்பற்று அவுணரை வெட்டிப்பலி யிட்டுக், குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

முத்தைத்தரு பத்தித் திருநகை
.அத்திக்கு இறை சத்திச் சரவண
..முத்திக்கு ஒரு வித்துக் குருபர எனவோதும்

.முக்கண் பரமற்குச் சுருதியின்
..முற்பட்டது கற்பித்து இருவரும்
...முப்பத்து முவர்கத்து அமரரும் அடிபேணப்

முத்தைத்தரு - முத்துப் போன்ற
பத்தித் திருநகை - அழகிய புன்னகையுடைய
அத்திக்கு இறை - அத்தி = யானை (தெய்வானை) யின் நாதனே
சத்திச் சரவண - சக்தி என்னும் ஆயுதத்தைத் தாங்கிய சரவணபவனே
முத்திக்கு ஒரு வித்துக் குருபர - முத்திக்கு வழிவகுக்கும் விதையான குருவே

இவ்வாறெல்லாம் முக்கண் உடைய சிவபெருமான் உன்னைத் துதிக்க, அவருக்கு, சுருதியின் (வேதத்தின்) மூலமான பிரணவத்தின் (ஓம்காரத்தின்) பொருளைக் கற்பித்து, இருவர் (திருமால், பிரம்மா), (முப்பத்து முவர்கத்து அமரர்) 33 கோடி தேவர்கள் யாவரும் வணங்குகின்ற திருவடிகளை உடையவனே...

பத்துத்தலை தத்தக் கணைதொடு
.ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
..பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

.பத்தற்கு இரதத்தைக் கடவிய
..பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
...பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒருநாளே

பத்துத் தலைகளை உடைய இராவணனைப் போரில் அம்பு எய்தி அழித்தவனும், மந்திர மலையை மத்தாகத் தன் மீது வைத்துத் தாங்கி, பாற்கடலில் அமுதம் பெற உதவியவனும், போர்களத்தில், தன் சக்கராயுதத்தை வைத்துக் கதிரவனை மறைத்து, பகற்பொழுதை இரவாக மாற்றியவனும், தன் பக்தனுக்காக (அருச்சுனன்) இரதத்தை (தேரை) ஒட்டிய, பச்சைப்புயலான (பச்சை வண்ணமிக்கவனான) திருமால் மெச்சக் கூடிய பொருளான முருகனே, நீ என்னைப் பட்சத்துடன் காத்தருளும் நாள் எந்நாளோ?

இங்கு ராமாவதாரம், கூர்மாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய மூன்று அவதாரங்கள் பற்றிய குறிப்பு வருகிறது.

அருணகிரிநாதர், முருகனைப் பற்றிப் பாடும் போது, சிவன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் என்று மற்ற தெய்வங்களையும் வைத்துப் பாடுவார். ஷண்மத தேவதைகளையும் பற்றி ஒருசேர அறியலாம் அவர்தம் பாடல்களிலிருந்து.

தித்தித்தெய ஒத்தப், பரிபுர
.நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
..திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுது ஆடத்

தித்தித் தைய என்ற ஜதிக்கு ஏற்ப, சிலம்பணிந்த  (பரிபுர) பதமுடைய பைரவி (காளி), எல்லாத் திசைகளிலும் சுழன்று சுழன்று நடனமாடுகிறாள்.
கழுகுகள், பேய்கள் (கழுது) முதலிய கணங்களும் நடனம் ஆடுகின்றன.

.திக்குப்பரி அட்டப் பயிரவர்
..தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
...சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக எனவோதக்

எட்டுத் திக்குக் காவலர்களான அஷ்ட பைரவர்களும் அழகாக "தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு" என்ற ஜதியைக் கூறுகிறார்கள்.

கொத்துப்பறை கொட்டக் களமிசை
.குக்குக்குகு குக்குக் குகுகுகு
..குத்திப்புதை புக்குப் பிடி என முதுகூகை

.கொட்புற்று எழ நட்பற்று அவுணரை
..வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
...குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

கொத்துப் பறை - நிறைய பறைகள் முழங்க (கொட்டக்), (களமிசை) போர்களத்தில், தீயவர்கள் இறக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த அனுபவம் நிறைந்த முதிர்ந்த கோட்டான்கள் (முதுகூகை), அவர்களைச் சுற்றி, மேலே (கொட்புற்றெழ)  வட்டமிடுகின்றன. அவர்களை "குக்குக்குகு குக்குக் குகுகுகு" என்று குத்தி, புதைத்து, தோலினுள் புகுந்து, பிடித்து இழுத்து உண்ணக் காத்துக்கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட போர்க்களத்தில், நட்பற்று அவுணரை (நட்பு என்பதே சிறிதும் காட்டாமல், அசுரர்களை), வேலினால் வெட்டி, அழித்து, அவர்கள் வசிக்கும் மலையான (குலகிரி) கிரௌஞ்ச மலையையும் குத்தி, தகர்த்த, போர் புரியும் வல்லமை மிகுந்த பெருமாளே..