Saturday 4 August 2018

அங்கை நீட்டி - திருச்சிராப்பள்ளி

இன்று ஆடி மாதம் கிருத்திகை நக்ஷத்ரம். முருகனுக்கு விசேஷமான நாள். திருச்சிராப்பள்ளி தலத்து முருகன் மீது, அருணகிரிநாதர் பாடிய மற்றொரு திருப்புகழைப் பார்ப்போம்.

இந்தப் பாடலிலும் முதற் பகுதியில் சிருங்காரம் மிகுந்து வருவதால், இரண்டாம் பகுதியிலிருந்து பாடியுள்ளேன். இதற்கு ஒலி வடிவம் கௌமாரம் தளத்தில் எதுவும் தரவில்லை. ஆதலால், முருகன் அருளாலும், திருப்புகழ் கற்ற பெரியவர் ஒருவரிடம் பெற்ற ஆலோசனையினாலும், இரண்டாம் பகுதியை மட்டும் பாடி, பதிவு செய்துள்ளேன்.

முழுப்பாடலையும் வேண்டுபவர் இங்கே படிக்கலாம்:
http://kaumaram.com/thiru/nnt0547_u.html

ராகம் - ரீதிகௌளை
தாளம் - அங்க தாளம் (7.5 அக்ஷரம்) - தகிட தகதிமி தகதிமி தகதிமி

தந்த தாத்தன தத்தத் தானன
.தந்த தாத்தன தத்தத் தானன
..தந்த தாத்தன தத்தத் தானன தனதான

எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
.அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
..இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் முடிவேறாய்

இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
.மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
..மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல வயலூரா

செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
.வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
..தின்று கூத்துந டிக்கத் தோகையில் வரும்வீரா

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
.மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
..தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் பெருமாளே.

(பார்வதி) பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே

விளக்கம்:

முருகப் பெருமானின் சிறப்புகளைத் தெரிவிக்கும் அழகிய வரிகள்:

1. எங்குமாய் - எல்லா இடத்திலும் நிறைந்தவன்
2. குறைவற்று - குறை இல்லாதவன்
3. சேதன அங்கமாய் - அறிவே வடிவானவன்
4. பரிசுத்தத்தோர் பெறும் இன்பமாய் - தூய மனம் கொண்ட அன்பர்கள் அடையும் இன்ப வடிவினன்
5. புகழ் - புகழ் வாய்ந்தவன்
6. முப்பத்தாறினின் முடிவேறாய் - 36 தத்துவங்களுக்கும் அப்பால் நிற்பவன்
7. இந்த்ர கோட்டி மயக்கத்தான் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்துத் தாமதமின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல - இந்திரனின் கோஷ்டிகள் (கோட்டிகள்) யாவரும் ஒன்று கூடி, சிறந்த மந்திரத்தால் பூஜை செய்ய, அவர்கள் முன் உடனே வந்து, சொர்க்கத்தைக் காத்துக்கொடுத்தவன்
8. வயலூரா - வயலூரின் தெய்வம்
9. செங்கை வேற்கொடு துட்டச் சூரனை வென்று - தன் சிவந்த கையில் வேல் ஏந்தி, தீய அரக்கர்களை வென்றவன்
10. தோல் பறை கொட்ட, கூளிகள் தின்று, கூத்து நடிக்க, தோகையில் வரும்வீரா - அந்தப் போர்களத்தில் வெற்றி கண்டதால், தோலினால் ஆன பறை வாத்தியங்கள் கொட்ட,
அசுரர்களின் பிணத்தை, பேய்கள் உண்டு, மகிழ்ச்சியில் நடனம் ஆட, கம்பீரமாக மயிலின் மீது ஏறி வரும் வீரன்

இதற்குப் பின், திருச்சிராப்பள்ளி ஸ்தல சிறப்பினைப் பாடுகிறார்.

செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
.மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
..தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் பெருமாளே.

செம்பொ(ன்)னால் திகழ் சித்ரக் கோபுர(ம்)
.மஞ்சு இராப்பகல் மெத்தச் சூழ்தரு
..தென்சிராப்பள்ளி வெற்பு

அதாவது, தூய பொன்னிறமான, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரம் உடையதும், மஞ்சு (மேகம்) எப்போதும் இரவும் பகலும் சூழ்ந்து காணப்படுவதுமான (உயர்ந்த இடத்தில் உள்ள கோயில்), தென் திசையில் உள்ள, திருச்சிராப்பள்ளி மலை.

இந்த மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே என்று பாடுகிறார்.

வேண்டுதலாக கேட்பது - பார்வதி பங்கர் (சிவ பெருமான்) போற்றிய தாமரைப் பாதத்தை, நானும் போற்ற எனக்கு அருள வேண்டும்.

பார்வதி பங்கர் போற்றிய பதம்த் தாளை நாமும் போற்றுவோமாக.

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1DwuMKe5QB1pnAUsWwE87oxF6c1WFuMKA

Wednesday 1 August 2018

தவள ரூப சரச்சுதி (குவளை பூசல்) - திருச்சிராப்பள்ளி

ஆடி மாதம் - அம்பாள் மாதம்

தவளரூப சரச்சுதி இந்திரை
ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை

சகல காரணி சத்தி பரம்பரி
இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவிதக்ஷணி அம்பிகை
த்ரிபுரை யாமளை

இவை என்ன ஸ்லோகம்?

ஆச்சர்யமாக இருக்கும். இது ஒரு திருப்புகழ். திருச்சிராப்பள்ளி தலத்தில் குடிகொண்டுள்ள முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில், நமக்குக் கிடைத்தவை 15.

அதில் ஒரு திருப்புகழின் நடுவில் வரும் வரிகளே இவை. குவளை பூசல் விளைத்திடும் அங்கயல் என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலில் வரும் வரிகள்.

யாமளை என்பதைத் தொடர்ந்து, அற்பொடு தந்தருள் முருகோனே. (அற்பு - அன்பு).

முழுப்பாடலையும் படிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்.

http://kaumaram.com/thiru/nnt0555_u.html

இதில் பார்த்தால், முதல் பகுதி, நிறைய சிருங்காரம் கலந்து வரும். அதனால், பெரியோர்கள், இரண்டாம் பகுதியிலிருந்து பாடுவார்கள். நாமும் அதனையே பின்பற்றுவோம்.

முதல் பகுதியில் அவர் கூறுவது, பெண்ணாசை கொண்டு, மோகத்தில் வீழ்ந்து மூழ்குவதிலிருந்து பிழைப்பேனோ என்கிறார். அடுத்த பகுதியில், அம்பாளின் நாமாக்களைச் சொல்லி, அவள் அன்போடு அருளிய முருகனே என்று தன் நாயகர் முருகனை வர்ணிக்கிறார்.

ராகம் - ஆனந்த பைரவி
தாளம் - ஆதி (1 இடம் விட்டு எடுக்கவும்)

தனன தானன தத்தன தந்தன
.தனன தானன தத்தன தந்தன
..தனன தானன தத்தன தந்தன தனதான

......... பாடல் .........

தவள ரூபச ரச்சுதி யிந்திரை
.ரதிபு லோமசை க்ருத்திகை ரம்பையர்
..சமுக சேவித துர்க்கைப யங்கரி புவநேசை

சகல காரணி சத்திப ரம்பரி
.யிமய பார்வதி ருத்ரிநி ரஞ்சனி
..சமய நாயகி நிஷ்களி குண்டலி யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
.கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
..த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் முருகோனே

சிகர கோபுர சித்திர மண்டப
.மகர தோரண ரத்நஅ லங்க்ருத
..திரிசி ராமலை அப்பர்வ ணங்கிய பெருமாளே.

என்னென்ன சொல்லி அம்பாளைப் பாடுகிறார்?

1. தவளரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை - இவர்கள் யாவரும் வணங்கும் துர்க்கை. யாரெல்லாம் வணங்குகிறார்கள்?

தவள ரூப - வெள்ளை நிறம் கொண்ட சரஸ்வதி
இந்திரை - லக்ஷ்மி தேவி
ரதி - ரதி தேவி (மன்மதனின் மனைவி)
புலோமசை - இந்த்ராணி (தேவேந்த்ரனின் மனைவி) - புலோமஜார்சிதா என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும். புலோமஜாவினால் அர்ச்சிக்கப் படுபவள்.
க்ருத்திகை - கார்த்திகை பெண்கள் அறுவர்
ரம்பையர் - ரம்பை முதலிய அப்சரஸ் ஸ்திரீகள் - ரம்பாதி வந்திதா (லலிதா சஹஸ்ரநாமம்)
சமுக - கூட்டங்கள்.
சேவித - வணங்குகின்ற

இவர்களால் வணங்கப் படுகிற துர்க்கை

2. பயங்கரி - தீயவர்களுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய பயங்கரி
3. புவனேசை - புவனேஸ்வரி
4. சகல காரணி - அனைத்திற்கும் காரணமானவள்
5. சத்தி - சக்தி
6. பரம்பரி - முழுமுதலாய் இருப்பவள்
7. இமய பார்வதி - இமவான் மகளான பார்வதி
8. ருத்ரி - ருத்ரனின் பத்தினி
9. நிரஞ்சனி - மாசற்றவள்
10. சமய நாயகி - சமயங்களின் தலைவி (சமயாசார தத்பரா)
11. நிஷ்களி - உருவமற்றவள்
12. குண்டலி - குண்டலினி சக்தி
13. எமது ஆயி - எல்லாவற்றிற்கும் மேலாக நமது தாய் (ஆயி - தாய்)
14. சிவை - சிவனின் தேவி
15. மனோன்மணி - மனத்தை ஞான நிலைக்கு உயர்த்துபவள்
16. சிற்சுக சுந்தரி - சித் - அறிவு, சுக - ஆனந்தம், அறிவு, ஆனந்த வடிவமான அழகி
17. கவுரி - கௌரி
18. வேத விதக்ஷணி - வேதங்களால் விசேஷமாக துதிக்கப்படுபவள்
19. அம்பிகை - அம்பிகை
20. த்ரிபுரை - திரிபுரங்களை எரித்தவள் - சிவன் முப்புரத்தை எரித்தார். அம்பாள் எங்கிருந்து வந்தாள்? சிவனின் ஒரு பாதி அம்பாள் ஆனதால், திரிபுரத்தை எரித்ததிலும் அவளுக்குப் பங்கு  உண்டு. இன்னொரு பொருள், ஸ்ரீசக்ர நவாவரணத்தில், முதல் ஆவரணம் - சதுரஸ்ரம் / பூபுரம் - ஒரு சதுரமாக இருக்கும் சுற்றின் தலைவி - த்ரிபுரை.
21. யாமளை - சியாமளை - யாமளை ஆனது. ராஜ மாதங்கி / மந்த்ரிணி என்று அம்பாள் அழைக்கப்படுவாள். சங்கீத ரூபிணி. அல்லது, யாமளம் - காளியைத் தெய்வமாகக் கொண்ட ஒரு வேதம். அந்த யாமள ரஹஸ்யத்தால் போற்றப் படுபவள்.

இவ்வாறு, அம்பாளை, 21 பெயர்களைக் கொண்டு கூப்பிட்டு அருணகிரிநாதர் மகிழ்கிறார்.

பின்னர், இப்படிப்பட்ட அம்பிகை அன்போடு நமக்கு அருளிய முருகோனே என்று முருகனைக் கூப்பிடுகிறார்.

அடுத்து, திருச்சிராப்பள்ளி தலமும், அந்த இறைவன் சிவபெருமான், தாயான ஈசனும் வர்ணிக்கப்படுகிறார்கள்.

சிகர கோபுர சித்திர மண்டப
 மகர தோரண ரத்ந அலங்க்ருத
  திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே.

திரிசிராமலை எப்படிப்பட்ட இடம்?

சிகர கோபுரமும் (பெரிய கோபுரம்) - மலை மேல் உள்ளதால், திருச்சியில், எங்கிருந்து பார்த்தாலும் கோயில் கோபுரம் தெரியும்.

சித்திர மண்டபமும் (அழகிய சித்திரங்கள் வரையப்பட்ட மண்டபங்கள்) - இன்றும் தாயுமானவர் கோவிலில், மண்டபங்களில் அழகிய ஓவியங்களைக் காணலாம். மகேந்திர வர்மன் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அவன் ஓவியத்திலும், சிற்பத்திலும் வல்லவன்.

மகர தோரணமும் (மகர மீன் வடிவில் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் வாயில்) - கலை நுட்பத்தைக் காட்டுகிறது.

ரத்தினங்களும் (பல மணிகள் அலங்காரத்திற்காக தொங்கவிடப் பட்டிருக்கும் கூரைகள்) - திருச்சிராப்பள்ளியின் செல்வ வளத்தைக் காட்டுகிறது.

இவை யாவும் அலங்கரிக்கும் மலை என்று பாடியுள்ளார்.

திரிசிராமலை அப்பர் என்று தாயான ஈசனைப் பாடிவிட்டார். அந்த ஈசன் வணங்கிய பெருமாள் என்று அவர் தலைவர் முருகனைப் பாடி முடித்தார்.