Sunday 29 October 2017

திருமகள் உலாவும் - கதிர்காமம்

ராகம்: குந்தலவராளி
தாளம்: ஆதி

தனதனன தான தனதனன தான
..தனதனன தான தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி
..திருமருக நாமப் பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
..தெரிதரு குமாரப் பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
..மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
..மருவுகதிர் காமப் பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
..அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
..அமலர்குரு நாதப் பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
..இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
..இருதனவி நோதப் பெருமாளே.

சூரசம்ஹாரம் நிறைவேற்றி இன்று தெய்வானையை மணம் செய்து கொள்கிறார் முருகப் பெருமான்.

பொருள்:

அருணகிரிநாதர் பல பாடல்களில் திருஞானசம்பந்தர், முருகப் பெருமானின் அவதாரம் என்பதை பறைசாற்றியுள்ளார். இந்தப் பாடலும் அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

திருமகள் உலாவும் இரு புய முராரி
 திரு மருக நாமப் பெருமாள் காண்
[இலக்குமி தேவி தழுவும் இரு தோள்களைக் கொண்ட திருமாலின் மருகன் என்னும் பெயர் உடையவன் நீ]

செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
 தெரி தரு குமாரப் பெருமாள் காண்
[செக தலம் - செக - ஜகம்; தலம் - மண் - மண்ணுலகம்;]
மண்ணுலகும் விண்ணுலகும் போற்றும் பாடல்கள் பல புனைந்த சம்பந்தப் பெருமான் நீ

மருவும் அடியார்கள் மனதில் விளையாடு
 மரகத மயூரப் பெருமாள் காண்
[வணங்கும் அடியாரின் மனதில் நிறையும் மரகத மயில் மீது வரும் பெருமான் நீ]

மணிதரளம் வீசி அணி அருவி சூழ
 மருவு கதிர்காமப் பெருமாள் காண்
[மணிகளையும் முத்துக்களையும் வீசி வாரும் அழகிய அருவி சூழ்ந்த கதிர்காமத்தின் இறைவன் நீ]

அருவரைகள் நீறுபட அசுரர் மாள
 அமர் பொருத வீரப் பெருமாள் காண்
[பெரிய மலைகள் வீழ, அசுரர்கள் மடிய போர் புரிந்த வீரன் நீ]

அரவு பிறை வாரி விரவுசடை வேணி
 அமலர் குருநாதப் பெருமாள் காண்
[பாம்பு, சந்திரன், கங்கை (வாரி) இவை கலந்த சடையுடைய சுத்தமான பரமசிவனின் குருநாதன் நீ]

இருவினையிலாத தருவினை விடாத
 இமையவர் குலேசப் பெருமாள் காண்
[நல்வினை, தீவினை என்று எவ்வினையும் இல்லாதவர்களும், தருவின் (கற்பகவிருட்சம்) நிழலை விட்டு என்றும் அகலாதவர்களுமான தேவர்களின் குலத்தைக் காத்த தலைவன் நீ]

இலகுசிலை வேடர் கொடியின் அதிபார
 இருதன விநோதப் பெருமாளே.
[சிலை - வில்; வில்லேந்திய வேடர் குலத்தின் கொடிபோன்றவளான வள்ளியை அவளது கருணைப் பெருகும் பெருமார்போடு அணைப்பவனும் நீ] 

அகரமும் ஆகி - பழமுதிர்சோலை

ராகம்: சிந்துபைரவி
தாளம்: விலோம சாபு (தகதிமி தகிட - அரை அடி தோறும் நான்கு முறை வரும் - 7 அக்ஷரம்)

தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி
 அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே
 இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
 வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
 திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

பொருள்:

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி
 [அகரம் - முதல்; முதன்மையானவன் ஆகி, அதிபன் - எல்லாவற்றிற்கும் தலைவனாகி, அதிகம் - யாவையும் கடந்தவனாகி, அகம் - அனைத்திற்குள்ளும் இருப்பவனாகி]

அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய்
 [பிரமன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகி, அவர்களுக்கும் மேலானவனாகி]

இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
 [இகரம் - இவ்வுலகில் உள்ள பொருட்களாகி, எங்கும் உள்ள பொருட்களும் ஆகி, இனிமை தரும் பொருளாக வருவோனே]

இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முனோடி வரவேணும்
 [இந்தப் பெரிய நிலம் மீது, எளியவன் வாழ, நீ என் முன் ஓடி வரவேண்டும்]

மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே
 [மகபதி - யாகங்களின் அதிபதியான வலாரி - இந்திரன் (வலாசுரன் என்னும் அசுரனை அழித்தவன் - வலாரி) மகிழ்வடையச் செய்த அழகனே]

வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
 [வனத்தில் வாழும் வேடன் செய்த பூஜையால் மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்த கதிர்காம முருகனே]

* முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட
பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில்
பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம்
பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற
வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. [நன்றி: கௌமாரம் வலைதளம்]

செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடும் மயிலோனே
 [செககண சேகு தகுதிமி தோதி திமி என்ற ஜதியில் மயில் மீது ஆடிவரும் மயிலோனே]

திரு மலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு பெருமாளே
 [திரு - லக்ஷ்மி; மலிவான - நிறைந்த; லக்ஷ்மீகரமான (அழகான) பழமுதிர்சோலை மலையில் உலாவும் பெருமாளே]

இக்கந்தசஷ்டி நன்னாளில் முருகப் பெருமான் எல்லா வளமும் நலமும் நமக்கு அருளட்டும்.

முருகா சரணம்!

வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!

இருமலு ரோக முயலகன் வாத - திருத்தணி

ராகம்: அசாவேரி
தாளம்: விலோம சாபு (தகதிமி தகிட - அரை அடி தோறும் நான்கு முறை வரும் - 7 அக்ஷரம்)

தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான

இருமலு ரோக முயலகன் வாத
 மெரிகுண நாசி ...... விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
 யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
 பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
 படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
 மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
 வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
 தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
 தணிமலை மேவு ...... பெருமாளே.

பொருள்:

இப்பாடல் சகல ரோகங்களையும் விரட்ட வல்லது. தினமும் பாடினால், நோயே இல்லாத வாழ்வு நமக்கு முருகன் அருளால் கிட்டும்.

இருமலு ரோக, முயலகன், வாதம், எரிகுண நாசி, விடமே, நீரிழிவு
 [இருமல் ரோகம், முயலகன் என்னும் வலிப்பு, வாதம், எரிக்கின்ற மூக்கு நோய், விட நோய்கள், நீரிழிவு (இன்று பெரும்பாலும் காணப்படுவது!)
 
விடாத தலைவலி, சோகை, எழுகள மாலை இவையோடே
 [தலைவலி, இரத்த சோகை, கழுத்தைச் சுற்றி வரும் புண்கள்]

பெருவயிறு, ஈளை, எரி குலை, சூலை, பெருவலி, வெறும் உள நோய்கள்
 [பெருவயிறு (cyst, ulcer) முதலிய வயிற்று நோய்கள், நுரையீரல் நோய்கள், நெஞ்சு எரிச்சல், வயிற்றுவலி]
 
பிறவிகள் தோறும் எனை நலியாத படி,
 [ஒவ்வொரு பிறவிகளிலும் என்னைத் தாக்கக் கூடாது]

உன தாள்கள் அருள்வாயே
 [அதற்காக உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக]

வரும் ஒருகோடி அசுரர் பதாதி மடிய
 [எதிர்த்து வந்த கோடிக் கணக்கான அசுரர்களின் காலாட்படை வீரர்களை இறக்கச் செய்து]

அனேக இசைபாடி வரும் ஒரு காலபயிரவர் ஆட
 [பலவித இசைகளைப் பாடி வரும் ஒப்பற்ற கால பைரவரான சிவபெருமான் களத்தில் மகிழ்ந்து ஆட]

வடிசுடர் வேலை விடுவோனே
 [ஒளி மிகுந்த வேலை விடுவோனே]

தரு நிழல் மீதில் உறை முகிலூர்தி தரு திருமாதின் மணவாளா
 [கற்பகத் தருவின் நிழலில் அமரும், முகிலை [மேகத்தை] வாகனமாக கொண்ட இந்திரன் பெற்ற பெண்ணின் மணவாளா!]

சலமிடை பூ இன் நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே
 [நீர் சூழ்ந்த உலகின் நடுவில் இருக்கும் பெருமை மிகு திருத்தணிகை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!] 

நிறைமதி முகமெனும் ஒளியாலே - சுவாமிமலை

ராகம்: ஹம்ஸாநந்தி
தாளம்: ஆதி (தகதிமி தகதிமி - அரை அடிதோறும் 2 முறை வரும் - 16 அக்ஷரம்)

தனதன தனதன ...... தனதான
   
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
 நெறிவிழி கணையெனு ...... நிகராலே

உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
 உனதிரு வடியினி ...... யருள்வாயே

மறைபயி லரிதிரு ...... மருகோனே
 மருவல ரசுரர்கள் ...... குலகாலா

குறமகள் தனைமண ...... மருள்வோனே
 குருமலை மருவிய ...... பெருமாளே.

பொருள்:

நிறைமதி முகம் எனும் ஒளியாலே [நிறைமதி - பூரணச் சந்திரன்; ஒளி - பிரகாசம்]
 நெறி விழி கணை எனும் நிகராலே [ நெறி - முறைமை; கணை - அம்பு; நிகராலே - நிகரான]
உறவுகொள் மடவர்கள் உறவு ஆமோ? [ மடவர்கள் - மாதர்கள்]
 உனது இரு அடி இனி அருள்வாயே [அடி - திருவடிகள்]
மறை பயில் அரி திரு மருகோனே [அரி - விஷ்ணு; திரு - இலக்குமி]
 மருவலர் அசுரர்கள் குல காலா [மருவலர் - பகைவர்]
குறமகள் தனை மணம் அருள்வோனே
 குருமலை மருவிய பெருமாளே [குரு மலை = முருகன் குருவாக அமர்ந்த சுவாமிமலை]

முழு நிலவைப் போல ஒளிரும் முகமும்
 அம்பு போன்ற கண்களும் உடைய
உறவு கொள்ளும் மாதர்களோடு உறவு கொள்ளுதல் தகுமோ? தகாது.
 ஆதலால், உனது இரு தாள்களையும் அருள்வாயாக.
வேதங்கள் போற்றும் திருமால், திருமகள் இருவரின் மருமகனே!
 பகைவர்களான அசுரர்களின் குலத்தை அழித்தவனே (காலனாக அமைந்தவனே)
குறமகளை மணம்புரிந்து அருளியவனே!
 குருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!

அபகார நிந்தை பட்டு உழலாதே - பழனி

ராகம்: சக்ரவாகம்
தாளம்: அங்க தாளம் (தகதகிட தகிடதக தகதகதிமி - 16 அக்ஷரம்)

தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தைபட் ...... டுழலாதே
 அறியாத வஞ்சரைக் ...... குறியாதே

உபதேச மந்திரப் ...... பொருளாலே
 உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ

இபமாமு கன்தனக் ...... கிளையோனே
 இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா

ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
 திருவாவி னன்குடிப் ...... பெருமாளே

பொருள்:

அபகார நிந்தை பட்டு உழலாதே [அபகாரம் - தீமை செய்தல்]
 அறியாத வஞ்சரைக் குறியாதே [குறித்தல் - நினைத்தல்]
உபதேச மந்திரப் பொருளாலே
 உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ
இபமாமுகன் தனக்கு இளையோனே
 இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெப மாலை தந்த சற்குருநாதா
 திருவாவினன்குடிப் பெருமாளே

பிறருக்குத் தீமைகள் செய்து அதனால் மற்றவர்கள் பழிக்கும் படி உழலாமல்
 நல்ல நெறிகளை அறியாத வஞ்சனை நிறைந்தவர்களை சற்றும் நினைக்காமல்
இறைவன் அருளிய உபதேச மந்திரங்களைச் சொல்லிச்சொல்லி
 அவனையே நினைத்து அவன் அருளைப் பெறுவேனோ?
ஆனை முகனுக்கு இளையவனே
 இமய மலை ராஜனின் புதல்வி, உத்தமி பார்வதியின் குழந்தையே!
ஜெபமாலையை அளித்த குருவே
 ஆவினன்குடி என்னும் பழனியில் வசிக்கும் இறைவனே!

பழனி மலையில் தான் முருகன், அருணகிரிநாதருக்கு ஒரு ஜெப மாலையை அளித்தார். அருணகிரிநாதர் பழநியைப் பற்றி சொல்லும் போது - அதிசயம் அனேகம் உற்ற பழனி மலை என்கிறார். அகத்தியருக்குத் தமிழ், அதன் இலக்கணம் ஆகியவற்றைக் கற்பித்தவர் - பழனி மலை முருகன். மாம்பழக் கவிராயர் என்னும் புலவர் கவி பாட அருளியவர் - பழனி மலையான். வள்ளி மலை சுவாமிகளுக்குத் திருப்புகழைக் காட்டியவர் பழனிமலையான். அவர் இல்லை என்றால் என்று திருப்புகழ் நமக்கு இல்லை. இவ்வாறு பல அதிசயங்கள் - மனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத பல அதிசயங்கள் அரங்கேறியது பழனி மலை.

இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி - திருசெந்தூர்

ராகம்: உசேனி
தாளம்: அங்க தாளம் (தகதகிட தகிட தகதிமி தகதகதிமி - 18 அக்ஷரம்)

தனதனன தனன தந்தத் ...... தனதான
 
இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
 இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
 உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல்
 வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே
 கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே

பொருள்:

இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
 இரவு பகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி
 உன்னை எனது உள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
 வனச குறமகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
 கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே

இயல் இசை ஆகியவற்றில் தேர்ந்த மங்கையர்களை* அடைந்து, அதனால் சோர்வடைந்து
 பகலிலும் இரவிலும் அவர்களையே நினைத்து, சம்சாரத்தில் உழலாமல்
உயர்வான கருணையைப் பொழியும் உனது அருட்கடலில் மூழ்கி
 உன்னை என் உள்ளத்தால் அறியும் அன்பினை அருள்வாய்
மயில்கள், ஆடுகள், வேடர்கள் சூழ்ந்த தினை வனத்தில் காவல் புரியும்
 திருமகளைப் போன்ற மலர்ந்த முகம் உடைய வள்ளியை முதலில் வணங்கி, அவளை மணந்தோனே!
கயிலை மலைக்கு நிகரான திருச்செந்தூர் என்னும் பதியில் உறையும் இறைவனே!
 யானைமுகனின் இளவலே! கந்தப் பெருமாளே!!

*இங்கு மங்கையர்கள் என்பதை, பெண்கள் மற்றும் பொன், பொருள், நிலம், மக்கள் என்னும் ஆசைகள் என்று வைத்துக்கொள்ளவும்.

பி.கு: பொதுவாக அருணகிரிநாதர், நோயுறுதல், விலை மாதுகளோடு உறவாடுதல், கீழ் மகனாக இருத்தல் என்று பெரும்பாலான பாடல்களில் வரும். அவரை முருகன் ஆட்கொண்டுவிட்டார். மேலும் முருகனின் புகழைப் பரப்புவதற்காக இப்பாடல்களைப் பாடினார். பின் ஏன் இவ்வாறு தன்னைச் சொல்லிக்கொள்கிறார் என்ற கேள்வி நம்மிடத்தே பிறக்கும்.

திரு கி.வ.ஜ அவர்கள் அழகாய் ஒன்று சொல்லியுள்ளார். அருணகிரிநாதர் ஒரு எழுத்தர் (scribe). ஒருவன் தவறு செய்தால், நீதி மன்றத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதித் தருபவர் அந்தக் குற்றவாளி எழுதுவது போல தான எழுதுவார். "நான் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன். மன்னித்துவிடுங்கள்" என்றெல்லாம் எழுதித் தருவார்.

அதே போல, நாம் செய்த பிழைக்காக இறைவனிடம் மன்னிக்குமாறு கோரிக்கை எழுதும் எழுத்தர் - அருணகிரிநாதர். நமக்கு வண்ணப் பாடல்களாக எழுத வராது. ஆதலால் நமக்காக அவர் எழுதி வைத்துள்ளார் அவர். நமது வேலை அவற்றைத் திரும்பித்திரும்பி இறைவன் முன் படிப்பது. பாடுவது.

Thursday 19 October 2017

சந்ததம் பந்தத் தொடராலே - திருப்பரங்குன்றம்

ராகம்: ஹிந்தோளம்
தாளம்: அங்க தாளம் (தகதகிட தகதிமி தகதகதிமி 15 அக்ஷரம்)

தந்தனந் தந்தத் ...... தனதான

சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங் குன்றிற் ...... பெருமாளே

பொருள்:

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும்
கண்டு கொண்டு அன்புற்று இடுவேனோ
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கில் சிவை பாலா
செந்தில் அம் கண்டிக் கதிர்வேலா
தென்பரங்குன்றில் பெருமாளே

தினமும் பந்தப் பாசத் தொடர்களினால்
பல மனக்குழப்பங்களுக்கு ஆளாகி, சோர்ந்து திரியாமல்'
கந்தன் கந்தன் என்று மனதால் உன்னைத் தினமும் பாடி
என் மனக்கண்ணில் உன்னைக் கண்டு அன்பு கொள்ள மாட்டேனா?
தந்தி - யானை. ஐராவதம் என்னும் யானை, பாதுகாத்து அன்புடன் வளர்த்தவளும், கொடி போன்றவளுமான தெய்வானையை மணம் செய்துகொண்டு சேர்ந்தவனே!
சிவபெருமானின் பக்கத்தில் வீற்றிருப்பவளாம் பார்வதி, அவளது மகனே!
திருச்செந்தூர், அழகிய கண்டி (இலங்கையில் உள்ளது) ஆகியவற்றில் வீற்றிருக்கும் ஒளிவீசும் வேல் உடையவனே
திருப்பரங்குன்றைத் தன் ஒரு படை வீடாக வைத்துக்கொண்ட பெருமானே!

கைத்தல நிறைகனி - விநாயகர்

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன .... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

பதம் பிரித்து:

கைத்தல நிறை கனி, அப்பமொடு அவல், பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ! கற்பகம் என வினை கடிது ஏகும்
[கடிது - விரைந்து; ஏகும் - அழியும், போகும்;]
கைகள் நிறைய பழங்கள், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை உண்ணக்கூடிய யானையின் முகம் கொண்ட பெருமானின் திருவடிகளை விரும்பிப் போற்றும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அடியவரின் சிந்தையில் உறையும் பரம்பொருளே! கற்பகத் தருவே! என்று விநாயகப் பெருமானைத் துதி செய்தால், வினைகள் யாவும் விரைவாய் நீங்கும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்;
[மத்தம் = ஊமத்தம் பூ; மதியம் - நிலா]
ஊமத்தம் பூ, நிலா ஆகியவற்றை வைத்திருக்கும் சிவபெருமானின் மகன்
மற்பொரு திரள் புய; மதயானை;
மல் யுத்தத்திற்குத் தகுந்த விரிந்த தோள்களை உடையவன். மதயானையை ஒத்தவன்.
மத்தள வயிறனை
மத்தளம் போல் பெருவயிறு உடையவன்.
உத்தமி புதல்வனை
உத்தமியான பார்வதியின் குமாரன். [இங்கு பார்வதி மஞ்சளை வைத்து ஒரு பிள்ளையைப் பிடித்துவைத்து, அதற்கு உயிரூட்டிய நிகழ்வு சொல்லப் படுகிறது]
மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே [மட்டு - தேன்; கொடு - கொண்டு]
இப்படிப்பட்டவனை, தேன் நிறைந்த மலர் கொண்டு பணிவேன்.

முத்தமிழ் அடைவினை, முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முத்தமிழான இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் முறைமையை, மேரு மலையில் (முற்படு கிரி - முதன்மையான மலை) அமர்ந்து எழுதியவனே!
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா
திரிபுர சம்ஹாரத்தின் போது, இவரை (விநாயகரை) வணங்காமல் சிவன் சென்றதால், முதலில் அவரது ரதத்தின் அச்சாணியைப் பொடி செய்த அதி தீரன்.

அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதன் இடை இபமாகி [இபம் - யானை]
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே
காதலினால் மிகு துயர்க்கொண்ட முருகனுக்காக, வனத்தில் யானை உருக்கொண்டு வள்ளியை மிரட்டி, முருகனுக்கு அந்த வள்ளியை மணம்முடித்து வைத்து, அருள்செய்த பெருமானே!

Monday 18 September 2017

உம்பர்தருத் தேனுமணி

ராகம் - ஹம்ஸத்வனி
தாளம் - அங்க தாளம் (5 5 6) [2 தடவை கண்டசாபு தாளம், 1 தடவை ரூபக தாளம்]

தகதகிட தகதகிட தகதகதிமி

தந்ததனத் தானதனத் தனதான

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
..ஒண்கடலிற் றேனமுதத்  துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
..என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பிதனக் காகவனத் தணைவோனே
..தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
..ஐந்துகரத் தானைமுகப் பெருமானே

பதம் பிரித்து:

உம்பர்தருத் தேனு மணிக் கசிவாகி
..ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
..என்றன் உயிர்க்கு ஆதரவு உற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத்து அணைவோனே
..தந்தை வலத்தால் அருள் கைக்கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
..ஐந்து கரத்து ஆனை முகப் பெருமானே

உம்பர்தரு - தேவலோக மரம் - கற்பக வ்ருக்ஷம்
தேனு - தேவலோகப் பசு - காமதேனு
மணி - உயர்ந்த சிந்தாமணி

இவை மூன்றுமே நாம் என்ன கேட்கிறோமோ அவற்றை நமக்குத் தந்துவிடும்.

கற்பக வ்ருக்ஷம் அதன் இடத்திலேயேதான் இருக்கும். நாம் தான் அதனிடம் சென்று கேட்கவேண்டும்.

காமதேனுவை, நமக்கு உயர்ந்த வரம் இருந்தால், எங்கு வேண்டுமானாலும்  அதனை அழைத்துச் செல்லலாம். நம்மிடத்திலே வந்து, நமக்கு வேண்டுவனவற்றைக் கொடுக்கும்.

சிந்தாமணி என்பது, உயர்ந்த மணி. நாம் அதனிடம் கேட்க, மணி அவ்விடத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிந்தாமணியை மனதளவில் நினைத்துக்கொண்டு கேட்டாலோ அல்லது நினைத்தால் மட்டுமோ போதும். உடனே தந்துவிடும்.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், அம்பாள், உயர்ந்த சிந்தாமணிகள் நிறைந்த க்ருஹத்தில் அமர்ந்திருக்கிறாள் (சிந்தாமணி க்ருஹாந்தஸ்தா) என்று போற்றுகிறது.

சௌந்தர்ய லஹரியில், ஸ்ரீ ஆதி சங்கரர், அம்பாளை "சிந்தாமணி குணநிகா" என்று பாடுகிறார். சிந்தாமணிக் குவியல் என்று பாடுகிறார்.

ஒரே ஒரு சிந்தாமணி கல்லே, கேட்பதைத் தந்துவிடும் என்றால், பல கற்கள் நிறைந்த குவியல் அம்பாள் என்றால், எவ்வளவு நமக்குத் தருவாள்?

அம்பாளைக் கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி என்றெல்லாம் பெரியோர்கள் போற்றி மகிழ்கின்றனர்.

நவராத்திரி தொடங்க இருக்கும் இத்தருவாயில், அம்பாளை வேண்டி அதிக வரம் பெற்று, உலகம் உய்ய ப்ரார்த்திப்போம்.

அம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் நாம் பெறலாம் என்று பாடினார் மஹாகவி பாரதியார்.

அம்பிகையின் புதல்வனான ஆனைமுகனை, அருணகிரிநாதர் இவ்வாறு பாடுகிறார்.

1. கற்பகவ்ருக்ஷம், காமதேனு, சிந்தாமணி இவற்றைப் போன்ற கருணை, நம் உள்ளத்தில் தோன்ற வேண்டும்.

2. ஒளி வீசும் பாற்கடலில் தோன்றிய அமுதம் போல், இனிமை நம் உள்ளத்தில் நிறைய வேண்டும்.

3. உள்ளத்தில் தோன்றிய அந்த இனிமையை, நாம் பல காலமும்  பருக வேண்டும்.

4. இவ்வாறெல்லாம் நடக்க, நம் மேல் ஆதரவு காட்டி அருளவேண்டும் விநாயகப் பெருமானே

5. தம்பி (முருகன்) அவன், வள்ளியை மணம் செய்துகொள்ள, அந்த திணை வனத்தில் யானையாக வந்து உதவியவனே

6. தந்தையான சிவபெருமானை வலம் வந்து, மாங்கனியைப் பெற்றவனே, அந்தக் கனியைக் கையில் வைத்துள்ளவனே.

7. வணங்கும் அடியார்களுக்கான முக்திப் பொருளே

8. ஐந்து கரங்கள் கொண்ட யானை முகப் பெருமானே

இந்தப் பாடலில் விநாயகப் பெருமானின் இரண்டு லீலைகள் பாடப்பட்டுள்ளது.


Monday 11 September 2017

முத்தைத்தரு

ராகம் - ஷண்முகப்ரியா
தாளம் - மிஸ்ரசாபு (தகிட தக திமி)

தத்தத்தன தத்தத் தனதன
.தத்தத்தன தத்தத் தனதன
..தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
.அத்திக்கிறை சத்திச் சரவண
..முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

.முக்கட்பர மற்குச் சுருதியின்
..முற்பட்டது கற்பித் திருவரும்
...முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
.ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
..பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

.பத்தற்கிர தத்தைக் கடவிய
..பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
...பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
.நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
..திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

.திக்குப்பரி அட்டப் பயிரவர்
..தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
...சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
.குக்குக்குகு குக்குக் குகுகுகு
..குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

.கொட்புற்றெழ நட்பற் றவுணரை
..வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
...குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

பதம் பிரித்து:

Prose order:

முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை,
சத்திச் சரவண,
முத்திக்கு ஒரு வித்துக் குருபர

எனவோதும் முக்கண் பரமற்குச், சுருதியின் முற்பட்டது கற்பித்து, இருவரும், முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேணப்.

பத்துத்தலை தத்தக் கணைதொடு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது,
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்,
பத்தற்கு இரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒருநாளே?

"தித்தித்தெய" ஒத்தப், பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப், பயிரவி திக்கொட்க, நடிக்கக், 
கழுகொடு கழுதாடத், 
திக்குப்பரி அட்டப் பயிரவர் "தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு" சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக், களமிசை "குக்குக்குகு குக்குக் குகுகுகு" குத்திப், புதை, புக்குப், பிடி என முதுகூகை கொட்புற்று எழ 

நட்பற்று அவுணரை வெட்டிப்பலி யிட்டுக், குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

முத்தைத்தரு பத்தித் திருநகை
.அத்திக்கு இறை சத்திச் சரவண
..முத்திக்கு ஒரு வித்துக் குருபர எனவோதும்

.முக்கண் பரமற்குச் சுருதியின்
..முற்பட்டது கற்பித்து இருவரும்
...முப்பத்து முவர்கத்து அமரரும் அடிபேணப்

முத்தைத்தரு - முத்துப் போன்ற
பத்தித் திருநகை - அழகிய புன்னகையுடைய
அத்திக்கு இறை - அத்தி = யானை (தெய்வானை) யின் நாதனே
சத்திச் சரவண - சக்தி என்னும் ஆயுதத்தைத் தாங்கிய சரவணபவனே
முத்திக்கு ஒரு வித்துக் குருபர - முத்திக்கு வழிவகுக்கும் விதையான குருவே

இவ்வாறெல்லாம் முக்கண் உடைய சிவபெருமான் உன்னைத் துதிக்க, அவருக்கு, சுருதியின் (வேதத்தின்) மூலமான பிரணவத்தின் (ஓம்காரத்தின்) பொருளைக் கற்பித்து, இருவர் (திருமால், பிரம்மா), (முப்பத்து முவர்கத்து அமரர்) 33 கோடி தேவர்கள் யாவரும் வணங்குகின்ற திருவடிகளை உடையவனே...

பத்துத்தலை தத்தக் கணைதொடு
.ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
..பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

.பத்தற்கு இரதத்தைக் கடவிய
..பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
...பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒருநாளே

பத்துத் தலைகளை உடைய இராவணனைப் போரில் அம்பு எய்தி அழித்தவனும், மந்திர மலையை மத்தாகத் தன் மீது வைத்துத் தாங்கி, பாற்கடலில் அமுதம் பெற உதவியவனும், போர்களத்தில், தன் சக்கராயுதத்தை வைத்துக் கதிரவனை மறைத்து, பகற்பொழுதை இரவாக மாற்றியவனும், தன் பக்தனுக்காக (அருச்சுனன்) இரதத்தை (தேரை) ஒட்டிய, பச்சைப்புயலான (பச்சை வண்ணமிக்கவனான) திருமால் மெச்சக் கூடிய பொருளான முருகனே, நீ என்னைப் பட்சத்துடன் காத்தருளும் நாள் எந்நாளோ?

இங்கு ராமாவதாரம், கூர்மாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய மூன்று அவதாரங்கள் பற்றிய குறிப்பு வருகிறது.

அருணகிரிநாதர், முருகனைப் பற்றிப் பாடும் போது, சிவன், அம்பாள், விஷ்ணு, விநாயகர், சூரியன் என்று மற்ற தெய்வங்களையும் வைத்துப் பாடுவார். ஷண்மத தேவதைகளையும் பற்றி ஒருசேர அறியலாம் அவர்தம் பாடல்களிலிருந்து.

தித்தித்தெய ஒத்தப், பரிபுர
.நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
..திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுது ஆடத்

தித்தித் தைய என்ற ஜதிக்கு ஏற்ப, சிலம்பணிந்த  (பரிபுர) பதமுடைய பைரவி (காளி), எல்லாத் திசைகளிலும் சுழன்று சுழன்று நடனமாடுகிறாள்.
கழுகுகள், பேய்கள் (கழுது) முதலிய கணங்களும் நடனம் ஆடுகின்றன.

.திக்குப்பரி அட்டப் பயிரவர்
..தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
...சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக எனவோதக்

எட்டுத் திக்குக் காவலர்களான அஷ்ட பைரவர்களும் அழகாக "தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு" என்ற ஜதியைக் கூறுகிறார்கள்.

கொத்துப்பறை கொட்டக் களமிசை
.குக்குக்குகு குக்குக் குகுகுகு
..குத்திப்புதை புக்குப் பிடி என முதுகூகை

.கொட்புற்று எழ நட்பற்று அவுணரை
..வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
...குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.

கொத்துப் பறை - நிறைய பறைகள் முழங்க (கொட்டக்), (களமிசை) போர்களத்தில், தீயவர்கள் இறக்கப் போகிறார்கள் என்பதை அறிந்த அனுபவம் நிறைந்த முதிர்ந்த கோட்டான்கள் (முதுகூகை), அவர்களைச் சுற்றி, மேலே (கொட்புற்றெழ)  வட்டமிடுகின்றன. அவர்களை "குக்குக்குகு குக்குக் குகுகுகு" என்று குத்தி, புதைத்து, தோலினுள் புகுந்து, பிடித்து இழுத்து உண்ணக் காத்துக்கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட போர்க்களத்தில், நட்பற்று அவுணரை (நட்பு என்பதே சிறிதும் காட்டாமல், அசுரர்களை), வேலினால் வெட்டி, அழித்து, அவர்கள் வசிக்கும் மலையான (குலகிரி) கிரௌஞ்ச மலையையும் குத்தி, தகர்த்த, போர் புரியும் வல்லமை மிகுந்த பெருமாளே..

Wednesday 23 August 2017

பக்கரை விசித்ரமணி

அருணகிரிநாதர் முருகன் மீது பாடியுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே. வினாயகர் மீதும் பாடியுள்ளார் என்பதும் பலர் அறிந்தது. கைத்தல நிறைகனி என்னும் பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.

இப்பாட்டைத் தவிர உம்பர்தரு தேனு மணி கசிவாகி, நினது திருவடி சக்தி மயில் கொடி, பக்கரை விசித்திர மணி என்னும் பல பாடல்களும் உள்ளன.

சிவபெருமான் பற்றியும், பார்வதி பற்றியும், விஷ்ணு பற்றியும் எண்ணற்ற குறிப்புகள் திருப்புகழில் வருகிறது.

இன்று விநாயக சதுர்த்தியை முன்னிட்டு ஒரு பாடலைப் பார்ப்போம்.

அருணகிரிநாதருக்கு, முருகன், திருவண்ணாமலையில் அருள் புரிந்து, முத்தைத்தரு என்னும் பாடலை, அவரைப் பாடவைத்தார் என்பது நாம் அறிந்த ஒன்று.

அதற்குப் பிறகு, திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் என்னும் தலத்திற்குச் சென்று தனது வேல், மயில், சேவல், கடப்ப மாலை, திருவடி, தோள்கள் ஆகியவற்றைப் பற்றி பாடுமாறு கூறி மறைந்தார்.

அருணகிரியாரும் வயலூருக்குச் சென்றார். அங்கே உள்ள விநாயகப் பெருமான் முன் நின்று, பாடல்கள்  பாட அருள வேண்டும் என்று வேண்ட, விநாயகரும்  அருளினார். அடுத்த நொடி, அழகிய பாடல்கள் வரலாயிற்று.

அந்த விநாயகரின் முன்னின்று பாடிய பாடல் இது.

இந்தப் பாடலில், விநாயகப் பெருமான் ஏற்கும் உணவுப் பண்டங்களைப் பற்றி பாடுகிறார். நம்மால் நிவேதனமாகப் படைக்க முடியுமோ முடியாதோ, இப்பாடலைப் படித்தாலே, நிவேதனங்களைப் படைத்த பலன் கிடைக்கும். விநாயகப் பெருமான் நமக்கு அருளுவார். அவர் அருளால், அவரையும், அவர் இளவல் முருகனையும் நன்கு பாடிப் பணிய முடியும்.

ஆடும் பரிவேல் அணிசெ வலெனப்
பாடும் பணியே பணியாய் அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே


http://www.kaumaram.com இந்த வலைதளத்தில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், அநுபூதி, அந்தாதி என்று பல பாடல்கள், இசையோடு, பொருளுரையும் இருக்கிறது.

இருந்தாலும் இன்னொரு பதிவு இங்கே இடுவதால் குறைவு ஒன்றும் இல்லை. மேலும் பரவ எளிதாய் இருக்கும்.

ராகம் - மோகனம்
தாளம் - ஆதி

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
..பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

.பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
...பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
..சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

.செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
...செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
..எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

.டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
...ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
..விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

.வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
...வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

சற்று குழப்பமாக இருக்கிறதா? பதம் பிரித்தால் எளிதாகி விடும்.

பக்கரை விசித்ரமணி பொற்கல் அணை இட்டநடை
..பட்சி எனும் உக்ர துரகமும், நீபப்

.பக்குவ மலர்த்தொடையும், அக் குவடு பட்டு ஒழிய
...பட்டு உருவ விட்ட அருள் கை வடிவேலும்,

திக்கதும் மதிக்க வரு குக்குடமும், ரட்சைதரு
..சிற்றடியும், உற்றிய ப(ன்)னிருதோளும்,

.செய்ப்பதியும், வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு
...செப்பு என எனக்கு அருள் கை மறவேனே

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு உடன் நெய்,
..எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்(டு)

.எச்சில், பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள
...ரிப்பழம் இடிப்பல்வகை, தனிமூலம்

மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு
..விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி

.வெற்ப, குடிலச்சடில, வில் பரமர் அப்பர் அருள்
...வித்தக, மருப்பு உடைய பெருமாளே.

பொருள்:

1. பக்கரை விசித்ரமணி பொற்கல் அணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும்-

முதலில் மயில் பற்றி பாடுகிறார்.

பக்கரை = காலூன்றும் படி (குதிரை மேல் ஏறுவதற்கு இருக்கும் படி)
விசித்ரமணி = அழகிய மணி
பொற்கல் = பொன்னிறமான மெத்தைப் போன்ற மேனி

இவற்றைப் பூண்டு கம்பீர நடைபயிலும் பறவை - மயில்.

மயில் மீது ஏறுவதற்கு எதற்காக படி வேண்டும்? முருகனுக்கு மயில் வாஹனம். குதிரையைப் போன்றது. அதனால்.

துரகம் = குதிரை.

2. நீபப் பக்குவ மலர்த்தொடையும்

அடுத்து, கடப்ப மாலையைப் பற்றி பாடுகிறார்.
நீபம் = கடப்பம்.
தொடை = மாலை.

3. அக்குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்ட அருள் கை வடிவேலும்

அடுத்து, வேலாயுதத்தைப் பற்றி வருகிறது. அக்குவடு = அக் + குவடு = அந்தக் குவடு. குவடு என்றால் மலை. கிரௌஞ்ச மலை மீது வேலை எய்தினார் முருகன். அந்த

வேலானது, அந்த மலையினை ஊடுருவிப் பிளந்தது. மலைமீது பாய்ந்து, மலையை அழித்த வேல் என்கிறார்.

4.திக்கதும் மதிக்க வரு குக்குடமும், - குக்குடம் = சேவல். எத்திசையாரும் வணங்கும் சேவல் கொடியும்

5. ரட்சைதரு சிற்றடியும், - பாதுகாக்கும் சிறிய பாதமும். முருகன் குமரன் அல்லவா. அதனால் அவனது அடி, சிறிய அடி.

6. உற்றிய ப(ன்)னிருதோளும், - திரண்ட பன்னிரு தோள்களும்

7. செய்ப்பதியும் - வயலூரும்

வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே

செய் = வயல் (நன்செய், புன்செய் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா)
பதி = ஊர்
செய்ப்பதி = வயலூர்.

இவ்வாறு இந்த ஏழு பொருட்களை (மயில், கடப்ப மாலை, வேல், சேவற்கொடி, திருவடி, தோள்கள், வயலூர் ஆகியவற்றை) வைத்து உயர்ந்த திருப்புகழை விரும்பி சொல்லுக என்று அருளிய கரங்களை நான் மறக்க மாட்டேன் என்கிறார்.

அடுத்து, விநாயகப் பெருமான் விரும்பி உண்ணும் பொருட்களைப் பட்டியல் இடுகிறார்.

இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு உடன் நெய்,
..எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்(டு)

.எச்சில், பயறு, அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள
...ரிப்பழம் இடிப்பல்வகை, தனிமூலம்

மிக்க அடிசில், கடலை,

1. இக்கு - கரும்பு
2. அவரை
3. நற்கனிகள்
4. சர்க்கரை
5. பருப்பு
6. நெய்
7. எள்
8. பொரி
9. அவல்
10. துவரை
11. இளநீர்
12. வண்(டு) எச்சில் - தேன்
13. பயறு
14. அப்பவகை
15. பச்சரிசி பிட்டு
16. வெளரிப்பழம்
17. இடிப்பல்வகை - பலவிதமான மாவு வகைகள்
18 தனிமூலம் மிக்க அடிசில் - தனித்துவம் வாய்ந்த கிழங்கு வகைகள். பூமிக்கு அடியில் விளைவதால் அடிசில்.
19. கடலை

பட்சணம் எனக்கொள் ஒரு - மேலே கூறியவற்றை உணவாகக் கொள்ளும், ஒப்பற்றவர்.

விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி - வினைகளைத் தீர்க்கும் வல்லவன், அருட்கடல். ஆழி = கடல்.

வெற்ப - கருணை மலை

இவை விநாயகப் பெருமான் பற்றிய வர்ணனை.

இனி சிவபெருமானைப் பற்றி பாடுகிறார்.

குடிலச்சடில - வளைந்த சடைமுடி உடையவர்
வில் பரமர் - பினாகம் என்னும் வில்லை ஏந்துபவர்
அப்பர் - யாவர்க்கும் தந்தை

அருள் வித்தக - இப்படிப்பட்ட சிவபெருமான் அருளிய வித்தகனே

மருப்பு உடைய பெருமாளே - தந்தம் உடைய பெருமாளே. மருப்பு = தந்தம், கொம்பு.

நெடிய பதிவுதான். எனினும், முடிந்தபோது படித்து அர்த்தத்தை நன்கு மனதிற்கொள்ளவும். திருப்புகழை விருப்பமொடு படிப்போம், பாடுவோம்.

விநாயகப் பெருமானே சரணம்.
முருகா சரணம்.
அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்.