Thursday 19 October 2017

கைத்தல நிறைகனி - விநாயகர்

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன .... தனதான

கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

பதம் பிரித்து:

கைத்தல நிறை கனி, அப்பமொடு அவல், பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ! கற்பகம் என வினை கடிது ஏகும்
[கடிது - விரைந்து; ஏகும் - அழியும், போகும்;]
கைகள் நிறைய பழங்கள், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை உண்ணக்கூடிய யானையின் முகம் கொண்ட பெருமானின் திருவடிகளை விரும்பிப் போற்றும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அடியவரின் சிந்தையில் உறையும் பரம்பொருளே! கற்பகத் தருவே! என்று விநாயகப் பெருமானைத் துதி செய்தால், வினைகள் யாவும் விரைவாய் நீங்கும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்;
[மத்தம் = ஊமத்தம் பூ; மதியம் - நிலா]
ஊமத்தம் பூ, நிலா ஆகியவற்றை வைத்திருக்கும் சிவபெருமானின் மகன்
மற்பொரு திரள் புய; மதயானை;
மல் யுத்தத்திற்குத் தகுந்த விரிந்த தோள்களை உடையவன். மதயானையை ஒத்தவன்.
மத்தள வயிறனை
மத்தளம் போல் பெருவயிறு உடையவன்.
உத்தமி புதல்வனை
உத்தமியான பார்வதியின் குமாரன். [இங்கு பார்வதி மஞ்சளை வைத்து ஒரு பிள்ளையைப் பிடித்துவைத்து, அதற்கு உயிரூட்டிய நிகழ்வு சொல்லப் படுகிறது]
மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே [மட்டு - தேன்; கொடு - கொண்டு]
இப்படிப்பட்டவனை, தேன் நிறைந்த மலர் கொண்டு பணிவேன்.

முத்தமிழ் அடைவினை, முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முத்தமிழான இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் முறைமையை, மேரு மலையில் (முற்படு கிரி - முதன்மையான மலை) அமர்ந்து எழுதியவனே!
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா
திரிபுர சம்ஹாரத்தின் போது, இவரை (விநாயகரை) வணங்காமல் சிவன் சென்றதால், முதலில் அவரது ரதத்தின் அச்சாணியைப் பொடி செய்த அதி தீரன்.

அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதன் இடை இபமாகி [இபம் - யானை]
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே
காதலினால் மிகு துயர்க்கொண்ட முருகனுக்காக, வனத்தில் யானை உருக்கொண்டு வள்ளியை மிரட்டி, முருகனுக்கு அந்த வள்ளியை மணம்முடித்து வைத்து, அருள்செய்த பெருமானே!

No comments:

Post a Comment